×

வனத்தில் கற்றாழை, துளசி காய்ந்தது

 

கோவை, மே 8: கோவை வனக்கோட்டத்தில் வன விலங்குகளின் நோய் தீர்க்கும் தாவரமாக கற்றாழை, துளசி இருக்கிறது. கடும் வெயில், வறட்சியால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட வனப்பகுதிகள் காய்கிறது. இந்த பகுதியில் வன உயிரினங்களுக்கான உணவு தேவை குறைந்து வருகிறது. யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய தோட்டங்களை தேடி உணவுக்காக வந்து செல்கின்றன. வனத்தில் வன விலங்குகளுக்கான உணவுகள் குறைந்து வருகிறது.

குறிப்பாக, யானைகள் விரும்பி சுவைக்கும் மூங்கில், அகில் அரிதாகி விட்டது. வனத்தில் பார்த்தீனியம் செடி பரவலாகி விட்டது. இதனால் துளசி, சோற்று கற்றாழை குறைந்து விட்டது. வன விலங்குகளின் நோய் தீர்க்கும் இந்த தாவரங்கள் இல்லாததால் நோய் பாதிப்பு அதிகமாகிவிட்டதாக தெரியவந்துள்ளது. வனத்துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பாட்டில் இருந்த கற்றாழை கோட்டம் பல ஆண்டிற்கு முன் மூடப்பட்டது. இதற்கு பிறகு, வனத்தில் கற்றாழை நடவு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. கற்றாழைகளை வனத்தில் பராமரிக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கற்றாழை, துளசி நோய் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக, யானைகளின் உடலில் உள்ள தட்டை புழு, உருளைப்புழு, ஈரல் புழுக்களை கொள்ளும் ஆற்றல் இவற்றிற்கு உண்டு. வனத்தில் யானைகள் சாப்பிட துளசி, காற்றாழை இல்லாததால் குடலில் பல வித குடல் புழுக்களால் யானைகள் நோய் பாதிப்பில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. வனத்தில் பார்த்தீனியம் செடிகளை அழிக்க வனத்துறை நிர்வாகம் முன் வரவில்லை. கடும் வெயில், வறட்சி, வன விலங்குகளின் மூலிகை தாவரங்கள் அழிவால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு வருவதாக வன ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

The post வனத்தில் கற்றாழை, துளசி காய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Forest Park ,Tirupur ,Erode ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...